மத்திய அரசாக இருந்தாலும் சரி அல்லது மாநில அரசாக இருந்தாலும் சரி ஒவ்வொரு தேர்தலின் போதும் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எந்த துறையிலும் ஊழல் மற்றும் லஞ்சம் உள்ளிட்டவை இருக்காது என்று வாக்குறுதி வழங்குவதற்கு மறப்பதில்லை.
ஆட்சியாளர்கள் என்ன தான் இப்படி பொதுமக்களிடம் வாக்குறுதியை வழங்கினாலும், அதிகாரிகள் அதனை பின்பற்ற நினைப்பதில்லை. இதன் காரணமாக, அரசியல்வாதிகள் யாரும் பாதிக்கப்படுவதில்லை, சாதாரண மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.
அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டம் டீ களத்தூர் அருகே உள்ள தேனூர் கிராமத்தைச் சார்ந்த ராஜா என்பவரின் மனைவி இந்திராணி(35). இவர் கொளக்காநத்தம் பகுதி வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில், அய்யர் குடிக்காடு கிராமத்தைச் சார்ந்த முருகானந்தம் என்பவரின் மனைவி முத்தரசி(30) என்பவர் பட்டா பெயர் மாறுதலுக்காக மனு வழங்கியிருந்தார். அந்த சமயத்தில் அந்த மனு மீது விசாரணை நடத்தி பட்டா மாறுதல் வழங்குவதற்காக வருவாய் ஆய்வாளர் இந்திராணி 20000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் இதனால் அதிர்ச்சியடைந்த தமிழரசி லஞ்சம் கொடுக்க விரும்பாமல் பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரை அணுகியிருக்கிறார். லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ஹேமச்சித்ரா தலைமையிலான குழுவினரின் ஆலோசனையின் அடிப்படையில் முத்தரசி ரசாயனம் தாவப்பட்ட ரூபாய் நோட்டுக்களை இந்திராணி இடம் வழங்கியபோது கையும், களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளார்.
இது தொடர்பாக இந்திராணியிடம் தொடர்ச்சியாக விசாரணை நடந்து வருகிறது. லஞ்சம் வாங்கி பிடிபட்டுள்ள வருவாய் ஆய்வாளர் இந்திராணி கடந்த 10 வருட காலமாக கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் வருவாய் ஆய்வாளராக பதவி உயர்வு அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் வருவாய் ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டிருக்கின்ற சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.