தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் அடுத்த வெற்றிலிங்கபுரம் கிராமத்தில் வசிப்பவர் வைரவ சாமி . இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முத்துமாரி என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் ஊருக்கு தொலைவில் இருக்கும் வீரசிகாமணி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இருவரும் தினமும் பைக்கில் ஒன்றாக வேலைக்கு சென்று வந்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் வேலைக்குச் சென்ற இருவரும் பைக்கில் இரவு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அப்போது சேந்தமரம் கிராமம் அருகே வந்து கொண்டிருந்த போது சில மர்ம நபர்கள் காரில் வந்து பைக்கை வழிமறித்தனர்.
அப்போது முத்துமாரியின் கழுத்தில் இருந்த நான்கு பவுன் தங்க நகையை பறிக்க முயன்றனர். அவர்களை வைரவசாமி தடுத்து உள்ளார். இதனால் வைரவசாமிக்கும் அந்த கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இரும்பு கம்பியை எடுத்து வைரவசாமியை அவர்கள் தாக்கி உள்ளனர். இதில் வைரவசாமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பிறகு நகையுடன் அவர்கள் தப்பி சென்றுள்ளனர். இதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் சேந்தமரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் வந்து வைரவ சாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அவரது உடலை அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு இந்த சம்பவம் குறித்து முத்துமாரியிடம் காவல்துறையினர் விசாரணை செய்த போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரிடம் அதிரடியாக விசாரணை நடத்தியதில் கணவனை கூலிப்படை ஏவி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். முத்துமாரியை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் சங்கரன்கோவிலை சேர்ந்த இசக்கி என்பவரையும் கைது செய்தனர். மேலும் எதற்காக கணவனை கூலிப்படை ஏவி கொலை செய்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.