உத்தரபிரதேசத்தில் சட்டவிரோத செயல்களை செய்பவர்களின் வீடுகளில் மின் இணைப்பு, குடிநீர் துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளிலும், மேலும் வன்முறையில் ஈடுபடுபவர்களின் வீடுகள் இடித்து அகற்றுவது போன்ற நடவடிக்கைகளை அந்த மாநில அரசு எடுத்து வருகிறது. அதுபோலவே கர்நாடகத்திலும் வன்முறையில் ஈடுபடுவோர், சட்டவிரோத செயல்களை செய்பவர்களின் மீது யோகி மாடல் ஆட்சிப்படி செயல்படுத்தப்படும் என்று கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ்பொம்மை எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் உ.பி. யோகி மாடல் ஆட்சி போல சிக்கமகளூரு நகராட்சி நிர்வாகமும் சட்டவிரோதமாக மாட்டிறைச்சி விற்பனை செய்பவர்கள் மற்றும் சட்டவிரோதமாக மாடுகளை அடைத்து வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் சிக்கமகளூரு டவுன் தமிழ் காலனியில் ஒரு வீட்டில் மாட்டிறைச்சி விற்பனை செய்வதாக நகராட்சி மற்றும் டவுன் காவல்துறையினருக்கு நேற்று முன்தினம் மாலை ஒரு தகவல் கிடைத்தது. அதனால் நகரசபை தலைவர் வேணுகோபால் தலைமையிலான அதிகாரிகள் காவல்துறையினருடன் சென்று அந்த வீட்டில் அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள சபியுல்லா என்பவர் வீட்டில் மாட்டிறைச்சி விற்று வந்தது தெரியவந்தது. அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வருவதை அறிந்து சபியுல்லா தப்பி ஓடி தலைமறைவானார். இதை தொடர்ந்து காவல்துறையினர், அவர் வீட்டில் இருந்த சுமார் 100 கிலோ மாட்டிறைச்சியை பறிமுதல் செய்தனர. இதைதொடர்ந்து மின்துறை ஊழியர்களை வரவழைத்து சபியுல்லாவின் வீட்டிற்கு மின் இணைப்பை துண்டித்தனர். இதுகுறித்து சிக்கமகளூரு டவுன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சபியுல்லாவை தேடிவருகின்றனர். மேலும் சிக்கமகளூரு டவுனில், கடந்த மாதம் மாட்டிறைச்சி விற்க்கப்பட்ட கடைகள் மற்றும் கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. தற்போது மாட்டிறைச்சி விற்றவரின் வீட்டின் மின் இணைப்பை துண்டித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.