கோவை மாநகர பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடை உரிமையாளர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அத்துடன் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், மாநகரப் பகுதியில் வசித்து வரும் பொது மக்களுக்கு பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக மஞ்சப்பை வழங்கப்பட்டுள்ளன.
இதுவரையில் 30,000க்கும் மேற்பட்டவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டுள்ளது. இந்த வருடம் முடிவதற்கு மாநகரப் பகுதியைச் சார்ந்த 1 லட்சம் பேருக்கு மஞ்சப்பை வழங்குவதற்கு முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது சென்ற 4 மாதத்தில் மட்டும் 4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு 9 லட்சம் ரூபாய்க்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக கடைகளுக்கு செல்லும் போது துணி பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். ஆகவே பொதுமக்களின் வசதிக்காக இலவசமாக மஞ்சப்பை வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்கள்.