16வது ஐபிஎல் சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இதில் ஏற்கனவே குஜராத், லக்னோ, சென்னை உள்ளிட்ட அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற சூழ்நிலையில், மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவி வந்தது.
இதில் பெங்களூரு அணி குஜராத்திடம் தோல்வியை சந்தித்தால் மட்டுமே மும்பைக்கான பிளே ஆப் சுற்று உறுதி செய்யப்படும் சூழ்நிலை காணப்பட்டது. இந்த நிலையில் தான் நேற்று நடைபெற்ற குஜராத், பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றதால் பெங்களூர் அணி வெளியேறிவிட்டது. ஆகவே மும்பை அணியின் கனவு நனவானது.
பெங்களூரு, குஜராத் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி பெறுவதற்கு சுப்மன் கில் முக்கிய காரணமாக இருந்தார். அவர் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். மேலும் இறுதி வரையிலும் ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் மோதிய 70 வது ஆட்டத்துடன் நடப்பு சீசனின் லீக் சுற்று நிறைவடைந்த நிலையில், குஜராத், சென்னை, லக்னோ, மும்பை உள்ளிட்ட அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். அந்த சுற்று ஆட்டங்கள் நாளை ஆரம்பிக்க உள்ளனர்.
அதில் சென்னையில் முதலில் நடைபெறும் குவாலிஃபயர்-1 ஆட்டத்தில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் நேருக்கு நேர் சந்திக்கின்றன. அதேபோல நாளை மறுநாள் அதே இடத்தில் நடைபெறும் எலுமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ மற்றும் மும்பை அணிகள் சந்திக்கின்றன. அதன் பிறகு குவாலிபயர் 2 மே மாதம் 26ஆம் தேதியும், இறுதி ஆட்டம் வரும் 28ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.