போதைப் பொருள் கடத்தல், விற்பனை மற்றும் பதுக்கலை தடுப்பதற்காக தலைநகர் சென்னையில் போதை தடுப்புக்கான நடவடிக்கை என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார் காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால்.
அதன் அடிப்படையில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் ஒரு கட்டமாக, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறை ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் நேற்று முன்தினம் காலை சூளைமேடு, எம்ஜிஆர் நகர் போன்ற பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கஞ்சா மற்றும் உடல் வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பொருட்களாக விற்பனை செய்ததாக மதுரவாயல் ஆனந்தன் (23) சைதாப்பேட்டை திவாகர்(24), அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார்( 23), சுந்தரராஜன் (23) உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களிடமிருந்து 330 உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கடத்திவரப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல பெண் கஞ்சா வியாபாரிகள் ஓட்டேரி அன்பழகி (25), கொருக்குப்பேட்டை பத்மா(55) உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டிருக்கின்றன. கைதான 6 பேரும் நீதிமன்ற காதலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.