பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வயலப்பாடி கீரனூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் மணி( 77). இவர் 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 6 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக, சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் குன்னம் காவல்துறையில் வழங்கிய புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மணியை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு மணி ஜாமினில் வெளியே வந்தார்.
பெரம்பலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி எஸ் முத்துக்குமாரவேல் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். அதில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் மணிக்கு 20 வருட காலம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் உள்ளிட்டவற்றை விதித்து தீர்ப்பு வழங்கினார் இதனை தொடர்ந்து, மணியை காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் சுந்தர்ராஜன் ஆஜர் ஆனார்.