விஜயாப்புரா மாவட்டம் சிந்தகியில் வசித்து வரும் சிவானந்தா. இவருக்கும் பெலகாவி மாவட்டம் அதானியை சேர்ந்த பிரீத்தி என்பவருக்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் தொழில் அதிபரான சிவானந்தாவுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் கள்ளக்காதல் இருப்பதாக பிரீத்தி நினைத்தார். இதுகுறித்து சிவானந்தா, பிரீத்தி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதனால் கடந்த சில தினங்களுக்கு முன் சிவானந்தாவிடம் கோபித்து கொண்டு பிரீத்தி அவரது வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை பிரீத்தியின் வீட்டிற்கு சென்ற சிவானந்தா பிரீத்தியை தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவானந்தா தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி இரண்டு ரவுண்டு சுட்டார்.
அதன் பிறகு தன்னுடன் குடும்பம் நடத்த வராவிட்டால் உனது தலையில் சுட்டு விடுவேன் என்று பிரீத்திக்கு, சிவானந்தா கொலை மிரட்டல் விடுத்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் அதானி காவல்துறையினர் பிரீத்தியின் வீட்டிற்கு விரைந்து சென்று சிவானந்தாவை கைது செய்தனர். அவரிடம் இருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான சிவானந்தா மீது அதானி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.