இணையதள சூதாட்டம் என்றாலே தற்போது அனைவரும் ஒருவித பயத்துடனே அனுகுகிறார்கள். இணையதள சூதாட்டத்தை மாநில அரசும், மத்திய அரசும் நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை எழுந்து வருகிறது.
சமீபத்தில் கூட இதற்கான சட்ட மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் கூட இந்த இணையதள சூதாட்டம் நின்ற பாடு இல்லை.இந்த இணையதள சூதாட்டத்தால் பணத்தை இழந்த ஏராளமான இளைஞர்கள் தற்கொலைக்கு முயற்சித்து உயிரை மாய்த்துக் கொள்வது வாடிக்கையாகி வருகிறது.
அந்த வகையில், சென்னை வியாசர்பாடி சுந்தரம் பவர் லைன் பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன் இவருக்கு செல்வி( 48) என்ற மனைவியும் தேவேந்திரன் (22) என்ற மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள் மகளுக்கு திருமணம் நடைபெற்று விட்டது. மகன் தேவேந்திரன் கூடுவாஞ்சேரியில் இருக்கின்ற ஒரு கைபேசி நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகின்றார்.
இந்த நிறுவனத்தின் பணத்தில் தேவேந்திரன் இணையதள சூதாட்டத்தில் ஈடுபட்டு 3 லட்சத்தை இழந்துள்ளார். ஆகவே கடந்த வாரம் நிரூபணம் சார்பாக கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் அவர் மீது புகார் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பணத்தை கட்டுவதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் அந்த நிறுவனத்தின் சார்பாக இவருக்கு தவணை வழங்கப்பட்டிருக்கிறது. அதனை அடிப்படையாகக் கொண்டு, நேற்று பணத்தை திருப்பி கட்ட வேண்டும் ஆனால் அவர் கட்டவில்லை இதனை தொடர்ந்து தேவேந்திரன் திடீரென்று தலை மறைவானார்.
இந்த சூழ்நிலையில், நிறுவன பணியாளர்கள் பணம் கேட்டு தேவேந்திரனின் வீட்டிற்கு நேற்று மதியம் வந்திருக்கிறார்கள். அவர் இல்லாததால் அவருடைய தாயை திட்டி, மிரட்டி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செல்வி வீட்டுக்குள் சென்று கதவை உள்புறமாக தாழிட்டு கொண்டு தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அதன் பிறகு வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டு இருக்கிறார்.
அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் சென்று கதவை உடைத்து செல்வியை மீட்டு ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செல்வி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இது தொடர்பாக வியாசர்பாடி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.