கரூர் மாவட்டத்தில் பள்ள சங்கனூர் கிராமத்தில் வசித்து வரும் தனபாலுக்கு இரண்டு மனைவிகள் ஒருவர் மேனகா இன்னொருவர் அம்பிகா இருவரும் சகோதரிகள். தனபால் மாட்டு வண்டி ஓட்டி பிழைப்பு நடத்தும் தொழிலாளி. அம்பிகாவின் கணவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்ததால். மேனகாவின் சம்மதத்துடன் அம்பிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் தனபால்.
இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி தெற்கு மேட்டுப்பட்டி கிராமத்தில் தனது இரண்டாவது மனைவியான அம்பிகாவை அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை அடித்து கொலை செய்துள்ளார் தனபால் . பின்னர் கொலை செய்த அம்பிகாவின் உடலை வயல்வெளியில் இருந்த தண்ணீர் இல்லாத கிணற்றில் போட்டு புதைத்துவிட்டு, இரண்டு நாட்களாக தனபால் தலைமுறைக்காக இருந்துள்ளார். இந்நிலையில் அம்பிகாவை உறவினர்கள் தேடி வந்த நிலையில், மது போதையில் தனது கணவர் தான் அடித்துக் கொன்று புதைத்து விட்டதாக முதல் மனைவி மேனகா போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். தன்னையும் தனது கணவர் தனபால் கொலை செய்ய முயற்சித்தார் என்றும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதை அடுத்து தனபாலை போலீசார் தேடி வந்த நிலையில் வெள்ளியணை போலீசாரிடம் தானாக சென்று தனபால் சரணடைந்திருக்கிறார். போலீசார் அம்பிகாவை புதைத்த இடம் எங்கே என்று கேட்டதும் தெற்கு மேட்டுப்பட்டி கிராமத்திற்கு சென்று மனைவியை புதைத்த இடத்தை காட்டி உள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் அம்பிகாவின் உடலை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தனபாலை கைது செய்தனர்.