தற்போதைய நிலையை பார்த்தால் பொங்கல் பண்டிகை முடியும் வரையில் கூட மழை பொழிவு இருக்கும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் வங்கக்கடல் பகுதியில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டு தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வட தமிழகத்தில் மழைபொழிவு சற்றே குறைவாக இருந்தாலும் கூட தென்தமிழகத்தில் மழையின் அளவு சற்று அதிகமாக காணப்படுகிறது.
வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கன்னியாகுமரியை நெருங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 8:30 மணி அளவில் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 320 கிலோமீட்டர் தென்கிழக்கு நிலை கொண்டிருக்கிறது. இது தென்மேற்கு திசை மூலமாக நகர்ந்து இன்று மதியம் இலங்கை கடற்கரையை திரிகோண மலையிலிருந்து தெற்கே நகர்ந்து, மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவலாம்.
ஆகவே தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அநேக பகுதிகளிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளிலும் இடி மின்னனுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களிலும் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மூட்டத்துடன் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நகரத்தின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸில் இருந்து 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கலாம்.
அதோடு தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இலங்கை கடலோர பகுதி தமிழக கடலோர பகுதி, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் , இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசலாம் ஆகவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.