இன்னும் இரண்டே தினங்களில் 2023ம் ஆண்டை வரவேற்பதற்கு இந்திய மக்கள் முதல் தமிழக மக்கள் வரையில் எல்லோரும் ஆவலாக காத்திருக்கிறார்கள்.ஆனால் இந்த 2023 ஆம் ஆண்டு பிறப்பதற்கு முன்னரே பொதுமக்களுக்கு 2️ வகையான அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒன்று கொரோனா, மற்றொன்று கனமழை.
இந்த வருடம் தான் வழக்கத்திற்கு மாறாக பருவமழை காலம் முடிவடைந்த பிறகும், தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.இந்த நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் இன்று மற்றும் நாளை உள்ளிட்ட தினங்களில் தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது எனவும், வட உள் தமிழக மாவட்டங்களில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
வரும் 31 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 2ஆம் தேதி வரையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் வறண்ட வானிலையே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸிலிருந்து 32 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸிலிருந்து 24 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்ற 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் ஊத்துவில் 9 சென்டிமீட்டர் மழையும், மாஞ்சோலை மற்றும் காக்காச்சியில் தலா 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது.