பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் இன்று பேருந்தின் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 20 பேர் உயிருடன் எரிந்தனர். லாகூரில் இருந்து சுமார் 350 கிமீ தொலைவில் இருக்கும் முல்தான் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில், அதிக வேகம் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
லாகூரில் இருந்து கராச்சிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பேருந்து மீது அதிவேகமாக வந்த எண்ணெய் டேங்கர் லாரி மோதியதில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. அதில், பல பயணிகள் தப்பிக்க முடியாமல் உயிருடன் எரிந்தனர். மேலும் இந்த கோர விபத்தில், தீக்காயங்களுக்கு உள்ளான ஆறு பயணிகள் முல்தானில் இருக்கும் நிஷ்தார் மருத்துவமனைக்கு அனுப்பபட்டனர். அங்கு அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.
விபத்தில் பலியான பெரும்பாலான பயணிகளின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு முற்றிலும் எரிந்து விட்டதால், இந்த உடல்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகு அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் தீ இரண்டு வாகனங்களையும் சூழ்ந்ததால் மீட்பு நடவடிக்கை தாமதமானது. மீட்புப்படை மற்றும் தீயணைப்பு குழுக்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.