ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா தொட்டநாகரா கிராமத்தில் வசித்து வருபவர் ஆஷா. இவருக்கு பிளிசாரே கிராமத்தை சேர்ந்த சதீஷ் என்பவருடன் கடந்த ஏழு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களது மகன் சுப்ரீத் (7). தனியார் பள்ளியில் படித்து வந்தான். மூன்று வருடங்கள் ஒற்றுமையாக குடும்பம் நடத்தி வந்த அவர்கள், பிறகு குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்துவிட்டனர்.
இதையடுத்து ஆஷா தனது மகனுடன், தொட்டநாகராவில் இருக்கும் தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆஷாவுக்கு, அந்த பகுதியில் இருக்கும் உமேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. மூன்று மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அந்த கிராமத்தில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று சிறுவன் சுப்ரீத்திற்கு உமேஷ் வீட்டு பாடம் சொல்லி கொடுத்தார். சிறுவன் சரியாக வீட்டுபாடம் எழுதவில்லை. அதைபார்த்து ஆத்திரம் அடைந்த உமேஷ், சிறுவனை அடித்து உதைத்தார். அப்போது கீழே தள்ளியதில் பலத்த காயமடைந்த சிறுவன் உயிருக்கு போராடினான்.
இந்நிலையில் மகனின் சத்தம் கேட்டு ஓடி வந்த ஆஷா உடனே அவனை சக்லேஷ்புரா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக பெங்களூருக்கு கொண்டு செல்லும்படி கூறினர். இதை தொடர்ந்து பெங்களூருவிற்கு கொண்டு செல்ல முயன்றனர். அதற்குள் சிறுவன் இறந்துவிட்டான். இதுகுறித்து ஹாசன் டவுன் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இதுகுறித்து ஹாசன் டவுன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உமேசிடம் விசாரணை செய்து வருகின்றனர்.