புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வடுகப்பட்டியில் வசித்து வருபவர் பாலு. இவரது மகன் அஜித்(23). அதே கிராமத்தைச் சேர்ந்த தனது உறவுக்கார பெண் சத்யா(20) என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித் காதலித்து வந்துள்ளார். சத்யாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் சத்யா கர்ப்பமானார். இந்த தகவலை அஜித்திடம் கூறி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சத்யா கேட்டுள்ளார். அப்போது அவரை திருமணம் செய்து கொள்ள அஜித் மறுத்ததால், இதுகுறித்து சத்யா கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், அஜித்தை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த மூன்று மாதமாக சிறையில் இருந்த அஜித் தனக்கு ஜாமீன் கேட்டு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இரண்டு முறை ஜாமீன் மனுவை ரத்து செய்தனர் நீதிபதிகள். அஜித் நேற்று, மீண்டும் ஜாமீனுக்கு மனு தாக்கல் செய்தார். தற்பொழுது நீதிபதிகள் ஒரு நிபந்தனையுடன் ஜாமின் மனுவை பரிசீலிப்பதாக கூறினார். ஏமாற்றிய பெண்ணை திருமணம் செய்து கொண்டு கைக்குழந்தையையும் ஏற்றுக் கொண்டால் ஜாமீன் தருவதாக நீதிபதி தெரிவித்தார்.
அதற்கு சம்மதித்த அஜித், புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் பிள்ளையார் கோயிலில் நீதிபதி அனுப்பி வைத்த வழக்கறிஞர்கள் மற்றும் சத்யாவின் குடும்பத்தினர், முன்னிலையில் சந்தியாவிற்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு அஜித்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர் அவர் குழந்தையுடன், தன் காதல் மனைவியையும் வீட்டுக்கு அழைத்து சென்றார்.