உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஷாமிலி அடுத்த கெடா குரு தான் என்கிற கிராமத்தில் குடியிருக்கும் கூலித் தொழிலாளியின் மகள் கைரு நிஷா. ஐந்து வயது சிறுமியான நிஷாவை வீட்டில் விட்டுவிட்டு அவரது பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். சிறுமி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். சிறுமியுடன் அவரது சித்தப்பா உமர் தீன் இருந்துள்ளார். அப்போது சிறுமியின் சித்தப்பா மாம்பழம் சாப்பிட்டுள்ளார். சிறுமி நிஷா, தனது சித்தப்பாவிடம் தனக்கும் மாம்பழம் வேண்டும் என்று கேட்டிடுள்ளார். அவரது சித்தப்பா மாம்பழம் தராததால் சிறுமி அடம்பிடித்து அழுதுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் சித்தப்பா வீட்டில் இருந்த தடியால் சிறுமியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். அதில் அந்த சிறுமி மயங்கி விழுந்தார். அதிலும் ஆத்திரம் அடங்காத அந்த இளைஞர் சமயலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து சிறுமியின் கழுத்தை அறுதுள்ளார், சிறுமி துடிதுடித்து உயிரிழந்துள்ளார். பிறகு சிறுமியின் உடலை கோணிப்பையில் கட்டி அருகில் உள்ள காட்டுப் பகுதியில் வீசியுள்ளார். வீடு முழுவதும் இருந்த ரத்தத்தை தண்ணீர் ஊற்றி கழுவியிருக்கிறார். அதன் பிறகு ஒன்றும் நடக்காதது போல் வீட்டில் இருந்துள்ளார்.
வேலை முடிந்ததும் வீட்டிற்கு வந்த சிறுமியின் பெற்றோர் மகளைக் காணவில்லை என்று பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். எல்லா இடத்திலும் தேடிய பிறகும் மகளைக் காணவில்லை என்பதால் ஏமாற்றமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் சிறுமியின் உறவினர்கள் அந்தப் பகுதி முழுவதும் தேடியுள்ளனர். அப்போது சிறுமியின் சித்தப்பா உமரும் அவர்களுடன் சேர்ந்து தேடுவது போல் நடித்துள்ளார். காவல்துறையினருக்கு உமர் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த உமர் அங்கிருந்து தலைமறைவாகி உள்ளார். எனவே காவல்துறையினருக்கு உமர் மீது சந்தேகம் வலுத்துள்ளது. சிறுமியை உமர் கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர்.
இதற்கிடையில், காவல்துறையினர் வனப்பகுதியில் பகுதி இருந்த உமரை கைது செய்தபோது சிறுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் சிறுமியை கொல்ல பயன்படுத்திய கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த இளைஞர் காட்டிய இடத்தில் இருந்து சிறுமியின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர். பிறகு சிறுமியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்து உமரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.