ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம், அத்தாணி சாலையில் சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, சாலையோரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் வேலை நடந்து வருகிறது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் கவுண்டபாளையத்தில் தகர கொட்டகை அமைத்து தங்கி இருக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு பணிமுடிந்து கூடாரத்துக்கு திரும்பிய தொழிலாளர்கள் சீட்டுகட்டு விளையாடினர். அப்போது, குமரி மாவட்டத்தை சேர்ந்த சுஜின்(40) மற்றும் ரமேஷ்(32) ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், பக்கத்தில் கிடந்த கடப்பாரையை எடுத்து சுஜினை சரமாரியாக அடித்துள்ளார். இதில் தலையில் படுகாயமடைந்த சுஜின் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கவுந்தப்பாடி காவல்துறையினர், கொலையான சுஜினின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய ரமேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.