நெல்லையில் மதிமுக பொதுச் செயலாளர் வை.கோபால்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது, மிக வெற்றிகரமாக திராவிட மாடல் ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். சொல்லாததையும் செய்து வருகிறேன் என அவர் சொல்லி வருவதைப் போல சொல்லாததையும் செய்து காட்டி தமிழக முதலமைச்சர் சாதித்து வருகிறார்.
தமிழ்நாட்டில் தற்போது பொற்கால ஆட்சி நடந்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பிறகு சிறந்த ஆட்சி நடைபெற முடியுமா?.. என்ற கேள்விக்கு பதிலாக திராவிட மாடல் ஆட்சி அமைந்துள்ளது. இந்தி, சமஸ்கிருதத்தை தமிழ் மக்களுக்கு திணித்து தமிழ்நாட்டை கைப்பற்ற நினைக்கும் பாஜகவின் கனவு ஒருபோதும் நடக்காது.
இந்தியையும், இந்துத்துவா கொள்கையும் நிலைநாட்டும் வகையில் பிரதமர் மோடி செயல்படுகிறார். தியாகத்தால் கட்டி எழுப்பப்பட்ட திராவிட இயக்க கோட்டையை சிதைத்து விடலாம் என்று நினைக்கும் மோடி கூட்டத்தின் பகல் கனவு ஒரு காலமும் நிறைவேறாது. இவ்வாறு அவர் கூறினார்.