மத்தியப் பிரதேசம் மாநிலம் தாமோவில் பைக் சாவிக்காக நடந்த சண்டையில், தந்தை கோடரியால் மகனின் கையை வெட்டியதால் அதிக அளவில் ரத்தம் வெளியேறி 21 வயது மகன் உயிரிழந்தார். மோதி படேல் (51), இவரது மூத்த மகன் ராம் கிசான் (24), இருவரும் வெளியே செல்வதற்காக அவரது இளைய மகன் சந்தோஷ் படேலிடம் பைக் சாவியைக் கேட்டனர். சந்தோஷ் சாவியை கொடுக்காததால், அவர்களிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த மோதி, ராம் கிசான் இருவரும் சந்தோஷை அடித்துள்ளனர். தந்தை மோதி சந்தோஷின் இடது கையை கோடரியால் வெட்டி துண்டித்துள்ளார். பிறகு அவர் கோடரி மற்றும் துண்டாக்கப்பட்ட கையுடன் காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததைசொல்லியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சந்தோஷை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அதன் பிறகு அவர் மாவட்ட ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவரை மேற்சிகிச்சைக்காக ஜபால்பூருக்கு அழைத்துச் செல்லும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர். அவ்வாறு ஜபால்பூருக்கு கொண்டு செல்லும் வழியில் அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால் சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார். காவல்துறையினர் மோதி, ராம் கிசான் இருவரையும் கைது செய்துள்ளனர்.