நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதியில் புதிதாக அமைக்கப்பட உள்ள நான்கு வழிச்சாலை பணி நடக்கிறது. அங்கிருக்கும் குலாளர் தெரு அருகில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது.
டாஸ்மாக் கடையில் மது வாங்குபவர்கள் நான்கு வழிச்சாலை வேலை நடைபெறும் இடத்திற்கு சென்று மது குடிப்பது வழக்கம். அதே போல நேற்று இரவு சிலர் மது வாங்கி சென்று குடித்துள்ளனர்.
அப்போது திடீரென்று அங்கு அலறல் சத்தம் கேட்டது. உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் சத்தம் வந்த இடத்துக்கு ஓடி சென்று பார்த்தனர். அப்போது அங்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்தறுபட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். ரத்த வெள்ளத்தில் கழுத்தறுபட்டு கிடந்த அவரை பார்க்க அங்கு கூட்டம் கூடியது. கூட்டத்தை கண்டதும் அப்பகுதியில் மறைந்திருந்த மூன்று வாலிபர்கள் தப்பி ஓடினார்கள்.
உடனே அங்கு இருந்தவர்கள் மூன்று பேரையும் விரட்டி சென்றனர். அதில் இரண்டு பேர் தப்பி ஓடி விட்டனர். ஒருவர் மட்டும் மாட்டிக்கொண்டார். அவரை பிடித்து வைத்து இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
உடனே போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத், குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன், இரணியல் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கிறிஸ்டி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்து போன வாலிபர் யார் என்பது தெரியவில்லை. அவருக்கு 30 வயது இருக்கும். பொதுமக்களிடம் பிடிபட்ட வாலிபர், குருந்தன்கோட்டை அடுத்த முக்கலம்பேட்டை சேர்ந்த அசோக் (25) என்பதும், தப்பி ஓடியவர்களில் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த அஜின் ஜோஸ் என்பதும் தெரிய வந்தது.
தப்பி ஓடிய இன்னொரு வாலிபர் யார் என்பது தெரியவில்லை. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் வில்லுக்குறி கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் இரணியல் காவல் துறையில் புகார் செய்தார். அதே சமயம் வாலிபர் இறந்து கிடந்த இடத்தின் அருகே கத்தி உறை ஒன்று கிடைத்தது.
இந்த கொலை குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத்திடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-
இந்த கொலை குறித்து நடத்திய முதல் கட்ட விசாரணையில் மூன்று பேர் சேர்ந்து மது அருந்தும் போது ஏற்பட்ட சன்டையில் இந்த கொலை நடந்ததாக தெரிய வந்துள்ளது. இறந்தவர் யார் என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.