புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் கலாசார விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் பல கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில், இந்த விழாவில் ஐதராபாத்தில் இருந்து வந்த தனியார் மருத்துவக்கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டனர். நேற்று நள்ளிரவில் நிகழ்ச்சிகள் முடிந்தவுடன், ஒரு மாணவி ஜிப்மர் வளாகத்தில் நடந்து வந்துகொண்டிருந்தார் அப்போது இரண்டு வாலிபர்கள் பைக்கில் வந்துள்ளனர்.
அவர்கள் மாணவியின் உடலை தவறான முறையில் தொட்டு மோசமாக நடந்துள்ளனர். இதனால் பதறிப்போன மாணவி, சத்தம்போட்டு கூச்சலிட்டு, உதவிக்கு அழைத்துள்ளார். இரவு நேரம் என்பதால் யாரும் உதவிக்கு வரவில்லை. இதை தெரிந்து கொண்ட அந்த வாலிபர்கள், திரும்பவும் மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளனர். இது குறித்து சக மாணவர்களிடம் அந்த மாணவி கூறியுள்ளார். அவர்கள் விசாரித்ததில், பைக்கில் வந்து மருத்துவ கல்லூரி மாணவியிடம் கேவலமான சில்லறை வேலையில் ஈடுபட்டது சாதாரண உடையில் இருந்த காவல்துறையினர் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து மாணவி கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஜிப்மர் வளாகத்தில் இருக்கும் சி.சி.டி.வி.கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மாணவியிடம் அத்துமீறிய காவலர் இரண்டு பேரையும் அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலதுறையினரே, இதுபோன்ற கேவலமான செயலில் ஈடுபட்டது குறித்து காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.