இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் பல மாதங்களாக அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விலைவாசி உயர்வு, மற்றும் உணவு, எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு போன்றவற்றால் அந்நாட்டு மக்கள் பெரும் தவித்து வருகின்றனர்.
அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று முன்தினம், இலங்கை அதிபர் மாளிகை முன்ப திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பிறகு, கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை ஆக்ரமித்தனர். போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபய தனது குடும்பத்துடன் தப்பி ஓடி விட்டார். அதிபரின் வீட்டை ஆக்கிரமித்த அந்நாட்டு மக்கள் அங்கிருந்த பொருட்களை எடுத்து சென்றனர். தற்போது வரை அந்நாட்டு மக்கள் பலர் அதிபர் வீட்டிலேயே உள்ளனர்.
கோத்தபயா தப்பியோடிய நிலையில் அவரது வீட்டை ஆக்கிரமித்துள்ள அந்நாட்டு மக்கள் அங்குள்ள நீச்சல் குளங்களில் நீச்சலடிப்பது போன்ற வீடியோ வெளிவந்து வைரலானது. இது போலவே உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற்கொண்டும், மதிய உணவு உண்பது போன்ற வீடியோக்களும் வெளிவந்தன. இந்நிலையில், இலங்கை அதிபர் மாளிகையில் புகுந்த மக்கள் உபயோகித்தது போக மீதமுள்ள பொருட்கள், குப்பைகள், கழிவு பொருட்கள் ஆகியவை மலைபோல் குவிந்தன. அவற்றை போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இளைஞர்கள், இளம்பெண்கள் அந்த குப்பைகளை திரட்டி மூட்டைகளாக கட்டி வைத்துள்ளனர்.
இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் கூறும்போது, கழிவு பொருட்களை தூய்மை செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வு எங்களுக்கு தோன்றியது. ஏனெனில் இது ஒரு பொது இடம். இலங்கையில் உள்ள நடைமுறையை எங்களுடைய தலைமுறை மாற்ற வேண்டும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்தி நாங்கள் ஒரு செய்தியை அவருக்கு தெரிவித்து விட்டோம். இதன்பின் நாங்கள் தற்போது அமைதியாக இருக்க வேண்டிய தருணமிது என அவர் கூறியுளார்.