தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகேயுள்ள புதுமனை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுயம்பு. இவர் பனை ஏறும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுயம்புகனி (55). இந்த தம்பதியினருக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே சென்னையில் வசித்து வருகின்றனர்.
சுயம்பு தைக்காவூர் பகுதியில் தங்கியிருந்து பனை ஏறும் தொழில் செய்து வருகிறார். வீட்டில் தனியாக வசித்து வந்த சுயம்புகனி கடந்த 14 ஆம் தேதி காலையில் வழக்கம் போல் வீட்டு வேலைகள் செய்துள்ளார். இந்த நிலையில், கடந்த 16 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் சுயம்பு கனியின் சகோதரி முத்து (45) மற்றும் அவரது கணவர் சேகர் ஆகிய இருவரும் சுயம்புகனி வீட்டுக்கு அருகே சென்றுள்ளனர். அப்போது சுயம்புகனி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு சுயம்பு கனி அழுகிய நிலையில் பிணமாக தரையில் இறந்து கிடந்துள்ளார்.
சுயம்புகனியின் கழுத்தில் சேலை இறுகிய நிலையில் காணப்பட்டது. சுயம்பு கனி அணிந்திருந்த தங்க கம்மல், தங்க மூக்குத்தி, கழுத்தில் அணிந்திருந்த நகைகளை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சுயம்புகனி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை மர்ம நபர்கள் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.