திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான தளவாய் பட்டினம் கிழக்கு தெருவை சேர்ந்த தண்டபாணி (56) அவருடைய மகன் காளிதாஸ் (29) இவர்கள் இருவரும் அடிக்கடி மது போதையில் சண்டையிட்டு கொள்வது வழக்கம்.
இந்த சூழ்நிலையில் தான் நேற்று தினம் இரவு குடிபோதையில் தந்தை மற்றும் மகன் உள்ளிட்ட இருவருக்கும் இடையில் தகராறு உண்டாகி இருக்கிறது. இதில் தண்டபாணி இரும்பு கம்பியை எடுத்து தன்னுடைய மகன் காளிதாசை தாக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனாலும் காளிதாஸ் சுதாரித்துக் கொண்டு, கம்பியை பிடுங்கி அவருடைய தந்தையின் பின் மண்டையில் தாக்கி இருக்கின்றார்.
இதன் காரணமாக, தண்டபாணி மயங்கி சுருண்டு விழுந்துள்ளார். அதன்பிறகு தகவல் அறிந்து வந்த உறவினர்கள் அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக தகவல் அறிந்த அலங்கியம் காவல்துறையைச் சார்ந்தவர்கள் காளிதாசை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடிபோதையில் மகன் தந்தையை அடித்தே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.