தெரியாத எண்ணில் இருந்து பேசிய பெண்ணை நம்பி சென்ற வாலிபரின் பைக், செல்போன் பறித்த நாண்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறியது, கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் பிரவீன் (25). இவர் ஒரு தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் ஏஜெண்ட்டாக வேலை செய்கிறார். இந்நிலையில், இவருடைய மொபைலுக்கு கடந்த மாதம் 26-ஆம் தேதியன்று இரவு 10 மணியளவில் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அந்த செய்தியை பார்த்ததும், உடனே அவர் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது எதிர்முனையில் அவருக்கு யார் என்று தெரியாத பெண் ஒருவர் பேசியுள்ளார். மேலும் அந்த பெண், நாகம்மநாயக்கன்பாளையம் வந்தால் இருவரும் நேரில் சந்தித்து பேசலாம் என்று சொல்லி அழைத்துள்ளார். பிரவீன் அதை நம்பி அதிகாலை 1.30 மணியளவில் பைக்கில் அங்கு சென்றுள்ளார். அங்கு அவருக்காக காத்திருந்த இளம்பெண் ஒருவர் அவரை அழைத்துக் கொண்டுஅருகில் இருக்கும் காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மூன்று பேர் திடீரென்று பிரவீனை மிரட்டி அவரது செல்போன் மற்றும் பைக்கை பிடுங்கிக் கொண்டு அனுப்பி விட்டனர்.
இது குறித்த புகாரின் அடிப்படையில் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன், சப்இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். இதில், பிரவீனிடம் செல்போன் பறித்தது திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் (24), அவருடைய மனைவி ரிதன்யா (20) மற்றும் சின்னக்கரையை சேர்ந்த இளந்தமிழன் (29), தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் (23) இவர்கள் நான்குபேர் என்பது தெரிய வந்தது. அவர்கள் நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.