வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்முருகன். இவர் ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொழிலாளர்களை அழைத்ததாக கூறப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தை அடுத்துள்ள சதுப்பேரி பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (40) அதேபோல ராணிப்பேட்டையையடுத்துள்ள புலியூர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (40), வாழைப்பந்தல் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் (25), வாலாஜாபேட்டை அடுத்துள்ள வீ.சி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜா(40) உட்பட சுமார் எட்டு பேர் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக நேற்று காலை சென்றனர் என்று கூறப்படுகிறது.
அதில் தமிழ்ச்செல்வன் கழிவுநீர் தொட்டியில் இறங்கிய அடுத்த சில நிமிடங்களில் விஷவாயுத்தாக்கி மயங்கி விழுந்தார். அவரை காப்பாற்றுவதற்காக மகேந்திரன், ராமதாஸ், ராஜா உள்ளிட்டோர் தொட்டிக்குள் இறங்கிய போது அவர்களும் மயக்கம் அடைந்து கீழே விழுந்தனர். உடனடியாக சக தொழிலாளர்கள் 4 பேரும் தொட்டிக்குள் இறங்கியவர்களை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தமிழ்ச்செல்வன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும் மற்ற 3 பேருக்கும் பெரிய பாதிப்பு ஏதுமில்லை என்பதால் அவர்களுக்கு சிகிச்சை வழங்க மருத்துவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், மகேந்திரன், ராஜா, மற்றும் ராமதாஸ் உள்ளிட்ட மூவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக சிப்காட் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. விஷவாயு தாக்கி உயிரிழந்த தமிழ்ச்செல்வனுக்கு மனைவி மற்றும் ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது