விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சாலவனூர் கிராமத்தில் கடந்த 6ம் தேதி பொறம்போக்கு நிலத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அந்த கிராம மக்கள் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த பள்ளத்தில் மனித உடலின் கை தெரிந்தது. இதன் காரணமாக, அதிர்ச்சிக்கு ஆளான கிராம மக்கள், அங்கு இருந்த பணித்தள பொறுப்பாளரிடம் இது தொடர்பாக தெரிவித்திருக்கின்றன இதனை தொடர்ந்து, பணித்தள பொறுப்பாளர் சாலவனூர் கிராம நிர்வாக அலுவலருக்கும், வஞ்சனூர் காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தார்.
இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரின் முன்னிலையில் பொதுமக்களின் உதவியுடன் பள்ளத்தில் இருந்த மண்ணை அப்புறப்படுத்தி அதில் இருந்த 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் உடலை மீட்டனர். தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, செஞ்சி துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
இத்தகைய நிலையில், நேற்று முன்தினம் காலை விழுப்புரம் தடயவியல் நிபுணர் சண்முகம் தலைமையிலான மருத்துவ குழுவினர் சாலவனூர் கிராமத்திற்கு சென்று இளம்பெண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து செஞ்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பது இளம் பெண் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்து புதைத்தார்களா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு தான் தெரியவரும். அந்த பெண் யார்? என்பதை அறிவதற்கு 25 வயது முதல் 30 வயது வரையில் காணாமல் போன இளம் பெண்கள் தொடர்பான விவரங்களை மற்ற காவல் நிலையங்களில் இருந்து பெரும் முயற்சி நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.