கணவரின் டார்ச்சர் தாங்க முடியாமல், மன வேதனையில் இருந்து வந்த மனைவி, திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை வீராணம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகள் மனோன்மணி (29). பட்டதாரியான இவருக்கும், நாமக்கல்லை சேர்ந்த தண்ணீர் லாரி உரிமையாளரான அரவிந்த் என்பவருக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இதற்கிடையே, அரவிந்துக்கு மது குடிக்கும் பழக்கம் அதிகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் போதையில் அரவிந்த் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால், மனமுடைந்த மனோன்மணி கடந்த ஜனவரி மாதம் பொன்னம்மாபேட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். கணவர் தன்னை மிகவும் டார்ச்சர் செய்வதால் இனி கணவனுடன் வாழமாட்டேன் என்று கூறி பெற்றோருடன் வசித்து வந்தார். திருமணம் ஆன பிறகு தன்னுடைய வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என தினம் தினம் நினைத்து கண்ணீர் வடித்த மனோன்மணி, என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் மனோன்மணி மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளித்தார். இதையடுத்து, உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, மனோன்மணியை மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது அவரது சகோதரர் செல்போன் மூலமாக மனோன்மணியின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். அதில், தனக்கு நேர்ந்த கொடுமையை தீக்காயத்தோடு மனோன்மணி விவரிக்கிறார்.
அதில், “அரவிந்த் ஒரு சைக்கோ குணம் கொண்டவர். இரவு எனது துணியை கிழித்து விடுவார். இரவு முழுவதும் தூங்க விடமாட்டார். இரவு தூங்கிய பிறகு எனது உடலில் அரவிந்த் அடிக்கடி ஏதோ ஊசி போடுவார். நான் எழுந்து காலையில் பார்க்கும்போது காலில் ரத்தமாக இருக்கும். உடைகள் எல்லாம் கிழிந்து இருக்கும். வீட்டில் யார் இருக்கிறார்கள்..? என பார்க்கமாட்டார். அவர்கள் முன்னிலையிலேயே அரவிந்த் என்னை டார்ச்சர் செய்வார். இதில், அதிக மனஉளைச்சலுக்கு ஆளாகி தினம் தினம் நான் அழுவேன். இரவு நேரங்களில் தன்னை தூங்க விடாமல் அரவிந்த் அடித்து டார்ச்சர் செய்வது குறித்தும், துணிகளை கிழித்து ஊசியால் தினசரி குத்தி கொடுமைப்படுத்தியது குறித்தும் வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தும், அவர்கள் அரவிந்த்விடம் தட்டி கேட்கவில்லை”. இவ்வாறு மனோன்மணி கூறியுள்ளார்.
இதுகுறித்து மனோன்மணியின் தம்பி கூறுகையில், நான் மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது எனது அக்காள் என்னிடம் பேசினார். அது வீடியோவாக இருக்கிறது. அரவிந்த் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மனோன்மணியின் தந்தை ராமசாமி, தனது மகளை திருமணம் ஆன 2 மாதத்திலேயே பலமுறை அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், நகை கேட்டு அடித்து விரட்டியதாகவும் கண்ணீர் மல்க காவல் நிலையத்தில் தெரிவித்தார். என் மகளுக்கு நேர்ந்த கொடுமை வேறு யாருக்கும் நிகழக்கூடாது. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். திருமணம் ஆன 10 மாதத்திலேயே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால், சேலம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றார்.