மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான நிதின் கட்கரியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து, கட்கரி என்ற திரைப்படம் தற்போது தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த திரைப்படத்தை, அனுராக் ராஜன் என்பவர் இயக்குகிறார். மேலும், இந்த திரைப்படம் எதிர்வரும் 27ஆம் தேதி திரைக்கு வரலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் டீசர் சென்ற திங்கள் கிழமை வெளியானது. அதோடு இந்த டீசர் பல்வேறு விதமான விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
மராத்தி மொழியில் தயார் செய்யப்பட்டு வரும் இந்த திரைப்படம், மற்ற மொழிகளிலும் விரைவில், மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இந்த படத்தில் ராகுல் சோப்டா, ஐஸ்வர்யா, அபிலாஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும், இந்த திரைப்படம் குறித்து பேசிய திரைப்படத்தின் இயக்குனர் அனுராக் ராஜன், நிதின் கட்கரியின் அரசியல் பயணம் தொடர்பாக நாம் எல்லோரும் அறிந்திருக்கலாம். அதைவிட சுவாரஸ்யமான அவருடைய இளமைக்காலம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக, பார்வையாளர்களுக்கு சொல்லும் விதத்தில், இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. சாதாரண நிலையில் இருந்து இன்று இந்தியாவின் கேபினட் அமைச்சராக உயர்ந்திருக்கும் அவருடைய வாழ்க்கைப் பயணம் பலருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
அண்மை காலமாக, பிரதமர் நரேந்திர மோடி, இந்திரா காந்தி, ஜெயலலிதா, மன்மோகன் சிங் ஆகிய அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக வெறியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.