நாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் மாதந்தோறும் தங்கள் ஊதியத்தில் 12% -ஐ இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். ஊழியர்கள் வேலைபார்க்கும் நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. மாத ஊதியம் பெறும் தனிநபர்களுக்கு நீண்டகால நிதி பாதுகாப்பை வழங்கும் ஒரு முக்கியமான சேமிப்புத் திட்டமாக இபிஎஃப் உள்ளது. பொதுவாக பணி ஓய்வுக்கு பின்னரே இபிஎஃப் தொகையை எடுப்பார்கள். ஆனால், பணி ஓய்வுக்கு முன்னர் எந்தெந்த சந்தர்ப்பங்களில் இபிஎஃப் தொகையை எடுக்கலாம்..? இதற்கான வரம்புகள் மற்றும் நிபந்தனைகள் என்ன..? என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மருத்துவ அவசர நிலை : இபிஎஃப் உறுப்பினர், அவரது வாழ்க்கைத் துணை, குழந்தைகள் அல்லது பெற்றோரின் சிகிச்சைக்காக இந்த தொகையை எடுக்கலாம். 6 மாத அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி (DA), அல்லது பணியாளரின் மொத்த பிஎஃப் பங்களிப்பு (முதலாளியின் பங்கைத் தவிர்த்து) தேவைக்கேற்ப இந்த பணத்தை எடுத்துக் கொள்ளலாம். மேலும், EPF நிதியை அணுகுவதற்கான எளிதான மற்றும் வேகமான வழியாக இது பார்க்கப்படுகிறது.
திருமணச் செலவுகள் : தங்கள் பிள்ளைகள் அல்லது உடன்பிறந்தவர்களின் திருமணங்களுக்காக பிஎஃப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் EPF உறுப்பினராக இருக்க வேண்டும். ஊழியரின் பங்கில் 50% வரை (வட்டியுடன்) பணம் கிடைக்கும். இதன் கீழ் மொத்தம் 3 முறை பணம் எடுத்துக் கொள்ளலாம்.
குழந்தைகளின் உயர்கல்வி : குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் EPF உறுப்பினராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்புக்குப் பிறகு மெட்ரிக் கல்விக்கு பிந்தைய கல்விக்கு மட்டுமே இந்த பணத்தை முன்கூட்டியே எடுக்க முடியும். ஊழியரின் பங்கில் 50% வரையிலான தொகையை எடுத்துக் கொள்ளலாம். அதிகபட்சம் 3 முறை (திருமணத்திற்காக எடுக்கப்படும் தொகையையும் சேர்த்து) பயன்படுத்திக் கொள்ளலாம்.
பணி ஓய்வு (வயது 54+) : பணி ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு இந்தப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். மொத்த EPF நிதியில் 90% வரை பெற்றுக் கொள்ளலாம்.
வீடு சம்பந்தமான நிதி : இதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும். 24 முதல் 36 மாத அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி அல்லது மொத்த EPF கார்பஸ் (பணியாளர் + முதலாளி + வட்டி) அல்லது வீட்டின் மொத்த விலை இவற்றில் எது குறைவோ அதை உங்களால் பெற்றுக் கொள்ள முடியும்.
வீடு புதுப்பித்தல் அல்லது பழுதுபார்ப்பு : வீடு கட்டி முடித்து 5+ ஆண்டுகளுக்குப் பிறகு அதன் பராமரிப்புக்காக பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இதை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்து கொள்ளலாம். 12 மாத அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி அல்லது EPF இருப்பு ஆகியவற்றில் எது குறைவோ அது கிடைக்கும்.
வீட்டுக் கடனை அடைக்க : இதற்கு 10 ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும். 36 மாதங்களுக்கான அடிப்படை ஊதியம் அல்லது நிலுவையில் உள்ள கடன் தொகை எது குறைவோ அது கிடைக்கும்.
Read More : பாகிஸ்தானுக்கு அடுத்த செக்!. செனாப் நதி நீரை நிறுத்தியது இந்தியா!. ஏவுகணை சோதனை செய்ததற்கு பதிலடி!