சென்னை – பெங்களூரு செல்லும் பேருந்துகள் இன்று இரவு 8 மணி முதல் நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு – கர்நாடகா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. காவிரி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. ஆனால், இதை ஏற்க கர்நாடகா மறுத்துவிட்டது.
இந்நிலையில், மண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் தமிழ்நாடு-கர்நாடகா இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. காவிரி பிரச்சனை தொடர்பாக நாளை பெங்களூரில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த பந்த், மாலை 6 மணிக்கு முடிவடையும். இந்நிலையில், தமிழர்களின் உடைமைகள் பாதிக்கப்படும் என்பதால் பெங்களூரு செல்லும் தமிழக லாரிகளை எல்லையிலேயே நிறுத்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகள் இன்று இரவு 8 மணி முதல் எல்லையிலேயே நிறுத்தப்படும் என தெரிகிறது. நாளை மாலை 6 மணிக்கு மேல் சூழலுக்கேற்ப மீண்டும் பேருந்துகள் இயக்கம் குறித்து முடிவு செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.