பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் களப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டம் சென்னை தியாகராய நகரில் இன்று நடைபெற்றது.
பாராளுமன்ற தேர்தலில் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பரப்புரை செய்வதற்கான வழிகாட்டுதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் சாதியம் தான் தனது எதிரி என தெரிவித்திருக்கிறார்.
மக்களின் உரிமைகளை நடவும் யார் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பதை அறிவதற்கும் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தல்களில் திமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்து விட்டு இந்த முறை அவர்களுடன் கூட்டணி அமைப்பது பற்றி பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். இப்போது மொத்த நாட்டு மக்களுக்கும் எதிரி யார் என்பதை மறந்துவிடக்கூடாது எனவும் தெரிவித்தார் .
மேலும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதை பலரும் தியாகம் என்று சொல்கிறார்கள். இது தியாகம் அல்ல எனது வியூகம் என குறிப்பிட்டு இருக்கிறார். தேர்தலில் போட்டியிட்டால் ஒரு தொகுதியில் மட்டும் தான் பிரச்சாரம் செய்ய முடியும். ஆனால் தேர்தலில் போட்டியிடாமல் அனைத்து தொகுதிகளிலும் நமது கூட்டணி கட்சிகளுக்கு பரப்புரை செய்யலாம் அதுதான் என் வியூகம் என தெரிவித்தார் கமல்ஹாசன்.