கேரள மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளிலும் சீட் பெல்ட் அணியும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இதுகுறித்து கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ கூறுகையில், “கேரளா சாலைப் பாதுகாப்பில் தனிக் கவனம் செலுத்துகிறது. ஏற்கனவே மக்கள் விதிகளைப் பின்பற்றுவதைக் கண்காணிக்க மாநிலம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் வழியே விதிமீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது. அடுத்தக்கட்டமாக கேபின் வசதி உள்ள பேருந்து மற்றும் லாரியில் டிரைவர், அவருடன் பக்கவாட்டில் இருந்து பயணிப்போர் ஆகியோர் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்னும் விதியை அமல்படுத்த உள்ளோம்.
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளிலும் சீட் பெல்ட் அணியும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும். பழைய பேருந்துகளில் சீட் பெல்ட் வசதியை ஏற்படுத்துவதற்கு வசதியாக உரிய கால அவகாசம் வழங்கி, இந்த சட்டமானது வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் கேரளம் விபத்தில்லாத சாலைப் பயணத்தில் இன்னும் ஒரு படி முன்னோக்கி நகர்கின்றோம்” என்றார்.