காரில் பயணிப்போர் கட்டாயம் சீட் பெல்ட் அணியவேண்டும் எனவும், மீறினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் டெல்லி போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்..
மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 194B (பாதுகாப்பு பெல்ட்கள் மற்றும் குழந்தைகள் இருக்கைகளைப் பயன்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. இந்த நடைமுறை ஏற்கனவே அமலில் இருந்தாலும், பலரும் இதை பின்பற்றவில்லை.. எனினும் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தற்போது போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சீட் பெல்ட் அணியாமல் பயணித்தோருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி (54) செப்டம்பர் 4 அன்று மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் சாலை விபத்தில் இறந்ததை அடுத்து இந்த இயக்கம் வந்துள்ளது. சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியவில்லை என்று கூறப்படுகிறது..
டெல்லியில் போக்குவரத்து காவல்துறையின் துணை ஆணையர் ஆலாப் படேல், “சட்ட விதிகள் ஏற்கனவே இருந்தன, ஆனால் சமீபத்திய சம்பவத்திற்கு (மிஸ்திரியின் மரணம்) பின்னர் இது விவாதப் பொருளாக மாறியுள்ளது.. சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த டெல்லி போக்குவரத்து காவல்துறை ஏற்கனவே ஒரு பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. நாங்கள் சட்ட நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்” என்று தெரிவித்தார்..
போக்குவரத்து விதிகள் தொடர்பாக டெல்லி காவல்துறை அவ்வபோது பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.. அந்த வகையில் கடந்த வாரம், டெல்லி காவல்துறை குடிமக்களுக்கு அதிக வேகம் வேண்டாம் என்றும் எப்போதும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தது..
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, டெல்லியில் கடந்த ஆண்டு 1,900 க்கும் மேற்பட்டோர் சாலை விபத்துக்களில் ஓட்டுநர்கள் அல்லது பயணிகளின் கவனக்குறைவால் இறந்துள்ளனர். சீட் பெல்ட் அணியாதது, முறையற்ற வாகனங்களை நிறுத்துவது, சிக்னலை மீறுவது மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது போன்ற காரணங்களுக்காக டெல்லி போக்குவரத்து காவல்துறை கடந்த ஆண்டு 1.2 கோடி பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..