சிங்கப்பூரில் உள்ள Bugis சந்திப்பில் ஹைடெக் மொபைல் என்ற கடையில் செயல்பட்டு வருகிறது. இங்கு லூ என்பவர் டெக்னீஷியனாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2021 ஜனவரி 10ஆம் தேதி, பெயர் குறிப்பிடப்படாத அந்த வாடிக்கையாளர் (30 வயது நபர்), தற்செயலாக உடைந்து போன தனது போனை சர்வீஸ் செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால், அவருக்கு வேலைகள் அதிகமாக இருந்ததால், அவர் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் பெண், அவருடைய போனை அந்த கடையில் ரிப்பேர் செய்ய கொடுத்துள்ளார்.
மேலும், ரிப்பேர் செய்து முடித்த பிறகு சரிபார்ப்பதற்காக கடவு சொல்லையும் அவரிடம் இருந்து கேட்டு பெற்றுள்ளார் அந்த கடைக்காரர். பின்னர், அந்த போனில் உள்ள சாட் ஹிஸ்டரியை படித்துப் பார்க்க துவங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் அந்த போனில் உள்ள டெலிகிராம் செயலியை திறந்த அவர், அதில் அந்த பெண்ணும் அவரது வருங்கால கணவரும் பேசிக் கொண்ட விஷயங்கள் குறித்து பார்த்துள்ளார்.
அதில் இருவரும் பகிர்ந்து கொண்ட சில அந்தரங்க புகைப்படங்கள் இருப்பதை கண்டு உடனடியாக அதை தனது செல்போனுக்கு டெலிகிராம் மூலம் அனுப்பி பெரும் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். சுமார் 40 புகைப்படங்களை அவர் தனது செல்போனுக்கு அனுப்பிக் கொண்டதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியில் அந்த போனில் ஜாக்கி என்று தனது பெயரை சேவ் செய்துவிட்டு அந்த போனை மறுநாள் அந்த பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில் தான், தனது டெலிகிராமில் ஒரு புதிய நம்பர் பதிவு செய்யப்பட்டிருப்பது அறிந்து சந்தேகம் கொண்ட பாதிக்கப்பட்ட அந்த நபர், புதிதாக ஜாக்கி என்று பதிவு செய்யப்பட்டுள்ள எண்ணிற்கு போன் செய்துள்ளார். ஆனால், தொடர்ச்சியாக அதை கட் செய்த அந்த நபர், தான் சிக்கிக் கொண்டதை எண்ணி அதிர்ந்து போயுள்ளார். ஒரு கட்டத்தில் போன் ரிப்பேருக்கு சென்ற இடத்தில் தான் ஏதோ கோளாறு நடந்திருக்கிறது என்பதை அறிந்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார் அந்த நபர்.
இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், லூ என்ற அந்த செல்போன் கடை நபரை கைது செய்தனர். விசாரணையில், ஏற்கனவே அவர் இது போன்ற சில சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு 3 மாதம் மற்றும் 6 வார சிறு தண்டனை வழங்கி சிங்கப்பூர் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.