வகுப்பறையின் நேரடி காட்சிகளை பெற்றோர் தங்கள் வீடுகளில் இருந்தபடியே செல்போன் மற்றும் கணினி வழியாக பார்க்கும் புதிய வசதி ஏற்படுத்தப்படுகிறது.
டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என கடந்த 2019ஆம் ஆண்டு அம்மாநில அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கான பணியை பொதுப்பணித்துறை செய்து வருகிறது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், ”டெல்லியில் புதிதாக பள்ளிகள் மற்றும் வகுப்பறைகள் கட்டும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. மேலும், வகுப்பறைகளில் கண்காண்ப்பு கேமரா பொருத்தும் திட்டம் உள்ளது. வகுப்பறையின் நேரடி காட்சிகளை பெற்றோர் தங்கள் வீடுகளில் இருந்தபடியே செல்போன் மற்றும் கணினி வழியாக பார்க்கும் வசதி ஏற்படுத்தப்படும்.
இந்த நடவடிக்கையின் மூலம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு கற்பித்தல் முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தங்கள் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும். இதற்காக பெற்றோர்களுக்கு தனிப்பட்ட ஐடி மற்றும் அதற்கான கடவுச்சொலுடன் கூடிய உள்நுழைவு சான்று வழங்கப்படும். மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களிடம் இருந்து ஒப்புதல் பெற்ற பிறகு, பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவர்களின் விவரங்களை பொதுப்பணித்துறைக்கு சமர்பிக்க வேண்டும். அதன்பின் தகவல்கள் மென்பொருளில் பதிவேற்றப்படும்” என அதிகாரிகள் தெரிவித்தனர்.