பீர் குடிக்கும் போட்டி தொடர்பான போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால் பொதுமக்களிடம் எழுந்த கண்டனங்களைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி பகுதிக்கு அருகில் உள்ள வாண்டான் விடுதி என்ற பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மூர்த்தி. இவர் நாம் தமிழர் கட்சியில் நிர்வாகியாக இருந்து வருகிறார். இந்நிலையில் பீர் குடிப்பது தொடர்பாக போஸ்டர் ஒன்றை தயார் செய்து தனது நண்பர்கள் இருக்கும் வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்து இருக்கிறார்.
இதனை அவரது நண்பர்களில் ஒருவர் விளையாட்டாக சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூகத்தை கெடுக்கும் வகையில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சமூக வலைதளங்களிலும் பொதுவெளியிலும் கடும் கண்டனம் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இந்த போஸ்டர் தொடர்பான பிரச்சனையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான கணேசமூர்த்தியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.