பெரம்பலூர் மாவட்டம், வெங்கடேசபுரத்தைச் சேர்ந்தவர் பிருத்திகைவாசன். கடந்த ஆண்டு மாவட்ட போலீசார் இவரை குற்ற வழக்கில் கைது செய்தனர். அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், பெரம்பலூர் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து, கடந்த 4 நாள்களுக்கு முன்பு இவரை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் அனுமதித்தனர்.
அப்போது, இவருக்கு பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் 2-ம் நிலை காவலரான 36 வயதான இளம்ராஜா என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். மேலும், முதலாம் ஆண்டு பயிற்சி செவிலியர் மாணவி ஒருவர் அந்தக் கைதிக்கு சிகிச்சை அளித்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் இளம்ராஜா, மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ந்துப் போன மாணவி, நடந்த சம்பவம் குறித்து மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி பாதிக்கப்பட்ட மாணவி சம்பவம் தொடர்பாக ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் அடிப்படையில், போலீசார் இளம்ராஜா, மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததை உறுதி செய்தனர். இதையடுத்து, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், இளம்ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.