பாரம்பரிய நெல் இரகங்களை மீட்டெடுத்து பாதுகாப்பதற்காக, ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 20 கிலோ விதை நெல் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம் மாவட்டம் விவசாயத்தை மட்டுமே பிரதானமாக நம்பியிருக்கிறது. இங்கு நெல் பிரதான சாகுபடி பயிராகும். குறிப்பாக CO 51, BPT 5204, NLR 34449, IWP உள்ளிட்ட சன்னரக நெல் ரகங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்நிலையில் வழக்கத்தில் இருந்து படிப்படியாக குறைந்து வரும் நாட்டு ரகங்கள் எனப்படும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும், வேளாண் துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து மீட்டெடுக்கவும், அதன் மருத்துவ முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மானிய விலையில் விதை நெல் வழங்கும் திட்டமானது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ளது.
நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்களின் பாதுகாப்பு இயக்கம் 2023-24-ன் கீழ், பாரம்பரிய நெல் ரக விதைகள், வேளாண்மை துறை மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. அதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் நெல் பாரம்பரிய ரகங்களான தூயமல்லி, ஆத்தூர் கிச்சலி சம்பா ஆகிய ரகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த ரகங்களின் விற்பனை விலை ஒரு கிலோ ரூ.50 ஆகும். ஆனாலும், விவசாயிகளுக்கு 50 சதவீத அரசு மானியத்தில் ஒரு கிலோ ரூ.25 விதம் வழங்கப்படுகிறது.
ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 20 கிலோ வரை அரசு மானியத்தில் விதை நெல் வழங்கப்படுகிறது. எனவே, சம்பா பருவ சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் மற்றும் துணை வேளாண் விரிவாக்க மையங்களில் பாரம்பரிய நெல் விதைகளை வாங்கி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.