அரசு மருத்துவமனைக்குள் நுழைந்த நாய், தாய் அருகே உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொடூரமான சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் சிரோகி மாவட்டத்தைச் சார்ந்தவர் மகேந்திர மீனா. இவருக்கு ரேகா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் இருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்த மகேந்திரன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உறுதுணையாக இருப்பதற்காக அவரது மனைவி ரேகாவும் மூன்று குழந்தைகளுடன் மருத்துவமனையில் தங்கியிருந்தார். அவர்களது மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை பிறந்து ஒரு மாதம் தான் ஆகி இருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது மகேந்திரன் மற்றும் ரேகா தம்பதியினர் தங்கி இருந்த வார்டுக்குள் புகுந்த நாய் ஒன்று ரேகாவின் அருகில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு மாத கை குழந்தையை இழுத்துச் சென்று கடித்துத் குதறியது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் காவல்துறையினர் மகேந்திரன் மற்றும் ரேகா தம்பதியினரிடம் வெற்று காகிதத்தில் கையொப்பம் வாங்கி அந்தக் குழந்தையின் உடலை தகனம் செய்து விட்டதாக குற்றம் சாட்டியிருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.