வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவதை இனி வருங்காலங்களில் அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது அறிக்கையில்; அகில உலகத் தமிழர்கள் போற்றும் ஒப்பற்ற ஒரே அரசியல் தலைவர் ஜெயலலிதா பற்றியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைப் பற்றியும் தரக்குறைவாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தமிழகத்தில் நடைபெற்ற பல ஆட்சிகள் ஊழல் ஆட்சிகள் என்றும், முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் என்றும் கூறியிருக்கிறார்.
இந்தப் பேச்சு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம் தமிழகத்தின் பொற்காலம். உண்மையை உணராமல், மனம் போன போக்கில், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவதை இனி வருங்காலங்களில் அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.