அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது..
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த ஆண்டு உச்சத்தை எட்டியது.. ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே நேரடி மோதல் ஏற்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடாப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.. ஓபிஎஸ் உள்ளிட்டோரை இபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கினார்.. இதே போல் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தார்..
இதை தொடர்ந்து ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது என்று அறிவித்ததுடன் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.. எனவே ஜூலை 11 பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்று தீர்ப்பளித்தனர்..
இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. வழக்கின் இறுதி விசாரணை கடந்த மாதம் நடைபெற்றது.. இதில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் பல வாதங்கள் முன் வைக்கப்பட்டன.. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷி கேஷ்ராய், இரு தரப்பையும் எழுத்து பூர்வமாக மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தினர்.. மேலும் அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்..
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் யாருக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிமுகவில் அதிகரித்துள்ளது.. மேலும் அதிமுக தொண்டர்களிடையே உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது..