கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் சோனி லிவ் போன்ற OTT தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.. ஆனால் இந்த OTT தளங்களில் பல நிகழ்ச்சிகளில் ஆபாச காட்சிகள், மோசமான வசனங்கள் உள்ளதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது.. இந்த நிலையில், இந்த புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பேசிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் படைப்பாற்றல் என்ற பெயரில் கொச்சையான மற்றும் தவறான வார்த்தைகளை ஏற்க முடியாது என்று கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனுராக் தாக்கூர், நெட்ஃபிளிக்ஸ், பிரைம் மற்றும் பிற OTT தளங்களில் சில நிகழ்ச்சிகளுக்கு எதிராக அதிகரித்து வரும் புகார்கள் குறித்து பேசினார், இந்தியாவில் இதுபோன்ற உள்ளடக்கத்தை தணிக்கை செய்வதில் இருந்து மத்திய அரசு பின்வாங்காது என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்தியாவில் OTT தளங்களில் வெளியிடும் உள்ளடக்கத்திற்கு மத்திய அரசு சில விதிகளை உருவாக்கியுள்ளது. நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் இந்தியர்களுக்கு சொந்தமானவை அல்ல என்பதால், அவற்றின் பெரும்பாலான உள்ளடக்கங்கள் வெளிநாட்டு தயாரிப்புகளால் தயாரிக்கப்படுகின்றன. தற்போது, அமேசான் பிரைம், நெட்ஃபிக்ஸ் இந்தியா மற்றும் பிற போன்ற OTT இயங்குதளங்களை ஒழுங்குபடுத்துவதற்காக தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு விதிகள் 2021ஐ மத்திய அரசு அறிவித்துள்ளது.
திரையரங்குகளில் வெளியிடப்படும் திரைப்படங்களைப் போல, OTT இயங்குதளங்களுக்கு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம், எந்த சான்றிதழையும் வழங்காது.. மேலும் OTT தளங்கள் தங்களின் உள்ளடக்கத்திற்கு சுய மதிப்பீடு சான்றிதழை வழங்குகின்றன. OTT தளங்கள் தங்கள் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுக்கான வயது அடிப்படையிலான உள்ளடக்க மதிப்பீடுகளைக் காட்ட வேண்டும்.
OTT நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் இப்போது இந்திய சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட மற்றும் தேசத்தின் இறையாண்மையை அச்சுறுத்தும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் ஒளிபரப்ப கூடாது. எனவே OTT தளங்களில் உள்ள உள்ளடக்கம் தொடர்பான அனைத்துப் புகார்களையும் பெறுவதற்கும், அவற்றைத் தீர்ப்பதற்கும், இந்தியாவைச் சேர்ந்த ஒரு குறைதீர்ப்பு அதிகாரியைக் கொண்டிருக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் பட்சத்தில், சம்மந்தப்பட்ட OTT தளம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்