பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் உயிரிழந்த கொடூர சம்பவத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் கிளம்பியது. இதனைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த இரண்டு இரவுகளில், குப்வாரா, சோபியான், பந்திபோரா மற்றும் புல்வாமா மாவட்டங்களில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நான்கு முக்கிய வீடுகள் உட்பட மொத்தமாக 9 வீடுகள் இடிக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை இரவில் ஐந்து வீடுகள் இடிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை இரவில் மேலும் நான்கு வீடுகள் இடிக்கப்பட்டன.
தற்போது இடிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் வீடுகள் விவரம்:
குப்வாரா மாவட்டம், கலாரூஸ்: பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் லஷ்கர் இ தொய்பா (LeT) பயங்கரவாதி ஃபரூக் அகமதின் வீடு இடிக்கப்பட்டது.
ஷோபியான் மாவட்டம்: 2024 முதல் LeT மற்றும் தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் (TRF) இயக்கங்களில் ஈடுபட்ட அட்னான் சஃபி தாரின் வீடு இடிக்கப்பட்டது.
பந்திபோரா, நாஸ் காலனி: 2016 முதல் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஜமீல் அகமது ஷீர் கோஜ்ரியின் வீடு குண்டுவெடிப்பின் மூலம் இடிக்கப்பட்டது.
புல்வாமா மாவட்டம், காசிபோரா டிரால்: 2024ல் ஜெய்ஷ் இ முகமது (JeM) இயக்கத்தில் சேர்ந்த அமீர் நசீர் வானியின் வீடு சந்தேகத்திற்கிடமான வெடிப்பில் இடிக்கப்பட்டது.
ஷோபியான், சோட்டிபோரா: லஷ்கர் இ தொய்பா தளபதி ஷாஹித் அகமது குட்டேவின் வீடு இடிக்கப்பட்டது. கடந்த 3-4 ஆண்டுகளாக பயங்கரவாத நடவடிக்கைகளை இயக்கியவர்.
குல்காம், மாதலம்: தீவிர பயங்கரவாதி ஜாஹித் அகமது வீட்டும் இடிக்கப்பட்டது.
புல்வாமா, முர்ரான்: 2018ல் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற அஹ்சன் உல் ஹக்கின் வீடு வெடிவிபத்தில் அழிக்கப்பட்டது.
புல்வாமா: 2023 முதல் செயல்பட்ட எஹ்சான் அகமது ஷேக் மற்றும் 2024 முதல் செயல்பட்ட ஹரிஸ் அகமது ஆகியோரின் வீடுகளும் வெடிகுண்டுகள் மூலம் தரைமட்டமாக்கப்பட்டது.
சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை: இதற்கிடையில், குப்வாரா மாவட்டம் கண்டி காஸ் பகுதியில், 45 வயதான சமூக ஆர்வலர் குலாம் ரசூல் மக்ரே சனிக்கிழமை இரவு அவரது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை உடனடியாக ஹந்த்வாரா அரசு மருத்துவக் கல்லூரிக்கு (GMC) கொண்டு சென்றனர். தாக்குதலின் பின்னணி தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Read more: இந்தியா-பாகிஸ்தான் மோதல் சூழல்.. கோவை, திருப்பூர் தொழில்துறையில் பாதிப்பு ஏற்படுமா..?