Indus Water: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம் உள்ளிட்ட பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தநிலையில், இந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து அவசரமாக நாடு திரும்பிய பிரதமர் மோடி, அமைச்சரவைக் குழு பாதுகாப்புக் கூட்டத்தை நடத்தி பாகிஸ்தான் மீதான நடவடிக்கையை இறுதி செய்தார். அதன் ஒருபகுதியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது, விசா கட்டுப்பாடுகளை விதித்தது மற்றும் அட்டாரி சோதனைச் சாவடியை உடனடியாக மூடியது உள்ளிட்ட அதிரடி உத்தரவுகளை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவை கைவிடும் வரை, 1960 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நிறுத்தி வைக்கப்படும்” என்று கூறினார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன? 1960 ஆம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் சிந்து நதியிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே எவ்வாறு தண்ணீர் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் ஒரு முறையான ஒப்பந்தத்தை ஏற்படுத்தின. சுதந்திரத்திற்குப் பிறகு நதியின் மீதான கட்டுப்பாடு இரு நாடுகளுக்கும் இடையே சாத்தியமான மோதலுக்கு ஒரு புள்ளியாக மாறியபோது, நீர் பகிர்வுக்கான ஒரு ஒப்பந்தத்தின் தேவை எழுந்தது.
1948 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்வதை தற்காலிகமாக நிறுத்தியது. பின்னர், இந்தியா போதுமான தண்ணீரை விடவில்லை என்று பாகிஸ்தான் ஐக்கிய நாடுகள் சபையிடம் (ஐ.நா) புகார் அளித்தது. ஐ.நா உதவி பெற பரிந்துரைத்தது, இது உலக வங்கி மத்தியஸ்தம் செய்ய வழிவகுத்தது. கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியாவின் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவும், அப்போதைய பாகிஸ்தானின் அதிபர் அயூப் கானும் இறுதியாக 1960 இல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் சிந்து நதி அமைப்பின் ஆறு முக்கிய ஆறுகளை இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பிரிக்கிறது. இந்தியாவில் 3 ஆறுகளையும்(ரவி, பியாஸ், சட்லஜ்) பாகிஸ்தானில் 3 ஆறுகளையும்(சிந்து, ஜீலம், செனாப்) உள்ளடக்கியதுதான் இந்த சிந்து நதிநீர் ஒப்பந்தம். மொத்த நீர் ஓட்டத்தில் சுமார் 80 சதவீதத்தைப் பெறுவதால், இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு அதிக நன்மை பயக்கும் என்று சில விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த ஆறுகள் பாகிஸ்தானின் விவசாயத்திற்கு, குறிப்பாக பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் இன்றியமையாதவை. பாசனம், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பாகிஸ்தான் இந்த நீர் விநியோகத்தை கணிசமாக நம்பியுள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வருகிறது சிந்து நதி ஒப்பந்தம். கடந்த ஆண்டுகளில், இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது தொடர்பான பரிசீலனைகள் இந்தியாவில் நடந்தது. அந்த நேரத்தில் பாகிஸ்தான் “இது போர் நடவடிக்கையை ஒத்ததாக” கருதப்படும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
சிந்து நதி நீரை நிறுத்துவது பாகிஸ்தானின் விவசாயத் துறையையும் அதன் ஏற்கனவே பலவீனமான பொருளாதாரத்தையும் பாதிக்கும். சமீபத்திய ஆண்டுகளில் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள மக்கள்தொகை வளர்ச்சி, காலநிலை மாற்றம் மற்றும் மோசமான நீர் மேலாண்மை உள்ளிட்ட பல காரணிகளால் ஏற்படும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறைக்கு இந்தப் ஒப்பந்தம் நிறுத்தப்படுவது வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
2019-ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சரவை குழுவுடன் உரையாடும்போது, “இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகச் செல்ல முடியாது” என்ற கூற்றை கூறியதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், அந்த நேரத்தில் இந்தியா ஒப்பந்தத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை தற்போது காஷ்மீரில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்றதற்குப் பொறுப்பேற்றுள்ள பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டின் தாக்குதலைத் தொடர்ந்து தற்போது சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.