Para Olympics: 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி களம் காணுகிறது. இந்நிலையில், தடகளத்தில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் பிரீத்தி பால் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இதன்மூலம் இந்தியா இன்று ஒரே நாளில் 3 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஓட்டப் பந்தயத்தில் சீனா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றது. ஏற்கனவே துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா ஒரு தங்கம், ஒரு வெண்கலம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது, பாரா ஒலிம்பிக் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனை அவ்னி லேக்ரா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அதேபோல், துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை மோனா அகர்வால் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024 இல் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் மணீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதனடிப்படையில் இதுவரை ஒரு தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் இந்தியா 17வது இடத்தில் உள்ளது.