மேற்குவங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 5 குழந்தைகள் சுவாச நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்..
சமீபகாலமாகவே பல்வேறு புதுப்புது வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் தற்போது மேற்குவங்கத்தில் அடினோவைரஸ் என்ற பாதிப்பு பரவி வருகிறது.. அடினோவைரஸ்கள் என்பது நமது நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை, கண்கள் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் வைரஸ் குழுவாகும். பெரியவர்களை விட குழந்தைகள் தான் இந்த வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். அடினோவைரஸ் வேகமாக பரவக்கூடிய தொற்று நோயாகும்.. குழந்தைகள் உள்ளிட்ட பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் ஆபத்தானது.
பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட நெருங்கிய தொடர்பு சூழல்களில் பரவலாக உள்ளது. இந்த வைரஸ் தோல் தொடர்புகள் மூலமாகவும், இருமல் மற்றும் தும்மல் மூலம் காற்று மூலமாகவும், பாதிக்கப்பட்ட நபரின் மலம் மூலமாகவும் பரவுகிறது. இதுவரை, வைரஸுக்கு சிகிச்சையளிக்க அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் அல்லது குறிப்பிட்ட சிகிச்சை முறை எதுவும் இல்லை.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5 குழந்தைகள் சுவாச நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இது மாநிலத்தில் அடினோவைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என்ற அச்சத்தை தூண்டி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.. இருப்பினும், இந்த இறப்புகள் அடினோவைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்டதா என்பது உறுதியாக தெரியவில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்..
அடினோவைரஸ் பொதுவாக குழந்தைகளில் சுவாசம் மற்றும் குடல் பாதைகளில் தொற்றுநோயை ஏற்படுத்துகிறது. 0-2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நோய்த்தொற்றுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாகவும், 2-5 வயதுடையவர்கள் பாதிக்கப்படக்கூடியவர்களாகவும், 5-10 வயதுடையவர்கள் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் வைரஸால் பாதிக்கப்படுவது குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்..
சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் பேசிய போது “ 5 குழந்தைகளின் இறப்புக்கு அடினோவைரஸ் தான் காரணமா என்பதை உறுதிப்படுத்த, பரிசோதனை அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்..” என்று தெரிவித்துள்ளார்..
இதனிடையே மேற்குவங்க சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.. காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.. குறிப்பாக இரண்டு வயது அல்லது அதற்குக் குறைவான குழந்தைகள் அடினோவைரஸால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதால், கூடுதல் கவனம் தேவை என்று அறிவுறுத்தி உள்ளது..
அடினோவைரஸின் அறிகுறிகள் என்னென்ன..?
- ஜலதோஷம், சுவாச பிரச்சனைகள்
- காய்ச்சல்
- தொண்டை வலி
- நிமோனியா
- காது தொற்று
- கண்கள் இளஞ்சிவப்பு நிறமாக மாறுவது
- வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்று வலி போன்ற பொதுவான செரிமான பிரச்சினைகள்
- மூச்சுக்குழாய் அழற்சி
- சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள்