Measles: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் தொடர்ந்து பரவி வரும் தட்டம்மை நோயால் முதல் மரணம் பதிவாகியுள்ளது. உயிரிழந்த குழந்தைக்கு தடுப்பூசி போடப்படாததே காரணம் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெக்சாஸ் மாநில சுகாதார சேவைகள் துறை (TDSHS) படி, அறிகுறிகளுடன் குழந்தை ஒன்று கடந்த வாரம் லுப்பாக்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது மாதிரிகள் சோதனை செய்ததில் தட்டமை இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த 25 ஆம் தேதி நிலவரப்படி, ஜனவரி மாத இறுதியில் இருந்து டெக்சாஸின் தெற்கு பகுதியில் 124 தட்டம்மை வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான தட்டம்மை நோயாளிகளில் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பதினெட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஐந்து பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு தடுப்பூசி போடவில்லை என்று கூறப்படுகிறது.
தட்டம்மை என்பது மிகவும் தொற்றக்கூடிய சுவாச நோயாகும், இது வைரஸிலிருந்து பாதுகாக்கப்படாத எவருக்கும் உயிருக்கு ஆபத்தான நோயை ஏற்படுத்தும். இருப்பினும், டெக்சாஸில் மட்டும் 2024 இல் 285 பேர் தட்டமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெக்சாஸ் மாநில எல்லைக்கு அருகில், கிழக்கு நியூ மெக்ஸிகோவில் செவ்வாயன்று கூடுதலாக ஒன்பது வழக்குகள் உறுதியாகின. அங்கிருந்து சுமார் 10 மாவட்டங்களுக்கு தொற்று பரவியுள்ளது என்று டெக்சாஸ் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொற்றுள்ளவர்களின் நீர்த்துளிகளுடன் நேரடி தொடர்பு கொள்வதன் மூலமோ அல்லது பாதிக்கப்பட்ட நபர் சுவாசிக்கும்போது, இருமும்போது அல்லது தும்மும்போது காற்றில் பரவுவதன் மூலமோ தட்டம்மை பரவும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்ட ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்குள் அறிகுறிகள் தென்படத் தொடங்கும். நோய்வாய்ப்படுவதைத் தடுப்பதற்கான சிறந்த வழி, தட்டம்மை தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொள்வது கட்டாயம். இந்த தடுப்பூசிகள் 97 சதவீதத்திற்கும் அதிகமான தட்டம்மை தொற்றுகளைத் தடுக்கிறது.