2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இந்தியா முழுவதும் வலுவாக இருந்தாலும் தமிழகத்தில் பின்தங்கியே இருக்கிறது.
இதனை மாற்றுவதற்காக பாஜக தலைமையும் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பாஜகவின் வெற்றிக்காக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஐந்து முறை பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை புரிந்திருக்கிறார். இந்நிலையில் வருகின்ற 19ஆம் தேதி மீண்டும் கோவைக்கு வர இருக்கிறார் பிரதமர். தமிழக மக்களின் ஓட்டுக்காக தான் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருவதாக எதிர்க்கட்சிகளும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறது..
நேற்று கன்னியாகுமரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் எதிரியாக திமுக அரசு இருக்கிறது என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கூட்டங்களிலும் பாஜக திமுக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. இவர்களது இந்த விமர்சனத்திற்கு இந்து சமய அறநிலையை துறை அமைச்சர் சேகர்பாபு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் சேகர்பாபு “திமுகவின் தொண்டனுக்கு கூட இணையற்றவர் அண்ணாமலை” என தெரிவித்திருக்கிறார். மேலும் எங்கிருந்தோ தமிழ்நாட்டிற்கு வந்து செல்பவர்கள் முதல்வரையும் திமுக அரசையும் வேண்டுமென்றே பழி சொல்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் முதல்வர் மீதான விமர்சனங்களுக்கு தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்த சேகர்பாபு, அமைச்சர் என்ற பதவியில் இருப்பதால் பொறுமையாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இயக்கத்திற்காகவும், இயக்கத் தலைவருக்காகவும் எதையும் செய்ய துணிந்த இயக்கம் திமுக என்பதை யாரும் மறந்து விடக்கூடாது என சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது ஆறுதல் சொல்ல வராத பிரதமர் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு தமிழகத்திற்கு அடிக்கடி வந்து செல்வதாக குற்றம் சாட்டினார். ஓட்டு மட்டுமே பாஜகவின் இலக்கு எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் என்னதான் பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்தாலும் தமிழகத்திலும் பாண்டிச்சேரியிலும் உள்ள நாற்பது தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தண்ணிக்கு கீழே தவம் இருந்தாலும், விமானத்தின் மீது தவமிருந்தாலும் தமிழகத்தில் பாஜகவால் வெற்றி பெற முடியாது என தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தல் வெற்றியை திமுக தொண்டர்கள் முதல்வருக்கு சமர்ப்பிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.