நகைச்சுவை நடிகர் ஒரு படத்தில் கிணறு காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்திருப்பார் அதேபோல ’’ பட்டா இடம் காணவில்லை என கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபர் அரை மொட்டையடித்துக் கொண்டு , பட்டை நாமமம் போட்டுக்கொண்டு பட்டா இடத்தைக் காணவில்லை என புகார் அளித்ததால் அலுவலர் பணியாளர்கள் அதிர்ந்துபோனார்கள்.
மனு கொடுக்க வந்த நபர் சங்கராபுரம் அருகே கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி . இவர் அரை மொட்டை அடித்துக் கொண்டு நாமம் அணிந்து கொண்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு தீர்ப்பு நாள் கூட்டத்திற்கு வந்திருந்தார். கையில் ஒரு பதாகையும் வைத்திருந்தார். அதில் அரசு வழங்கிய பட்டாஇடத்தை காணவில்லை என புகார் அளித்தார்.

’’ அவர் அளித்த புகார் மனுவில் , ’’ கொசபாடி கிராம எல்லையில் கடந்த 1998ம் ஆண்டு 85 பயனாளிகளுக்கு 3 சென்ட் நிலம் விகிதம் பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில் சாலைக்கு 1.27 சென்ட் இடம் , சமுதாய நன்மைக்கு 0.63 சென்ட் இடம் எதிர்கால நன்மைக்கு 0.24 சென்ட் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வருவாய்த்துறை ஆவணப்படத்தில் இந்த படம் உள்ளது. ஆனால் நேரில் பார்க்கும் போது சமுதாய நன்மைக்கு ஒதுக்கப்பட்ட இடமும் , எதிர்கால நன்மைக்கு ஒதுக்கப்பட்ட இடமும் காணவில்லை. அதனை வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக உரிய முறையில் ஆய்வு செய்து காணாமல் போன இடத்தை கண்டுபிடித்து தர வேண்டும் என திரைப்பட பாணியில் புகார் அளித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மனுவை மாவட்ட ஆட்சியர் அருகே அமர்ந்திருந்த நேர்முக உதவியாளர் சுரேஷிடம் ஒப்படைத்தார். அதைப் பெற்ற அதிகாரி நில நிமிடம் என்ன செய்வது என்று தெரியாது குழம்பினார். விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அவருக்கு ஒரு கும்பிடு போட்ட சுப்பிரமணி வெளியேறினார்.